இலங்கையில் சிறப்பு பயிற்சி பெற்ற விமானப்படை தயார் நிலையில்
இலங்கை விமானப்படை தயார் நிலையில் இருப்பதாக விமான படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அறிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி, கொழும்பு, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலைப்பாங்கான பகுதிகளில் (மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள்) மற்றும் ஆற்றுப்பகுதிகளுக்கு அருகில் உள்ள தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தயார் நிலையில் விமானப்படையினர்
இது தொடர்பில் சுதர்சன பத்திரன மேலும் தெரிவிக்கையில், ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
அனர்த்த நிலைமைகள் குறித்து, விமானப்படையின் விமானங்கள் நாட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
அனர்த்தங்கள் ஏற்படும் போது, மக்களை மீட்பதற்கும் நிவாரணங்களை வழங்க உலங்குவானூர்திகள், சிறப்பு பயிற்சிப் பெற்ற விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
