நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று(01.04.2025) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் இன்று காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பித்த நிகழ்வுகள் இம்மாதம் 30ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளன.
நுவரெலியா மாநகரசபை ஆணையாளர் எச்.எம்.பண்டார தலைமையில் வசந்த கால ஏற்பாட்டுக் குழுவின் கலைகலாச்சார நடன நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த வசந்தக்கால நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக மத்தியமாகாண பிரதான செயலாளர் ஜி. எச்.எம். அஜீத் பிரேமசிங்க கலந்துகொண்டார்.
விசேட பேருந்து சேவை
வழக்கம் போல் நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் பொது அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையுடனும் மற்றும் ஊர்திகளின் ஊர்வலத்துடன் நிகழ்வுகள் கோலாகாலமாக ஆரம்பமாகின.
இதனைத் தொடர்ந்து, வரும் நாட்களில் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தயம், குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறவுள்ளன.
எனவே, நுவரெலியாவிற்கு வருகைதர இருக்கும் சுற்றுலாபயணிகளின் நன்மை கருதி அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா மாநகரசபையும், பயணிகளை பாதுகாப்பதற்கான விசேட சேவையை நுவரெலியா பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வெளி மாவட்டங்களிலிருந்து நுவரெலியாவிற்கு விசேட பேருந்து சேவை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





