கால்நடைகளால் எலிக்காய்ச்சல் பரவுகின்றதா! ஆய்வு செய்ய கொழும்பில் இருந்து விசேட குழு
கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று வருகை தர உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நேற்றையதினம் (17.12.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சலை பரப்பும் பற்றீரியா
கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எலிக்காய்ச்சலை பரப்பும் பற்றீரியா அந்த பிரதேசங்களில் உள்ள கால்நடைகளில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, அதனை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதனடிப்படையில் இன்று கொழும்பில் இருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஒரு விசேட குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |