நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்: சபாநாயகர் கையொப்பம்
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் நேற்று (08.08.2023) முதல் நடைமுறைக்கு வருகின்றது.
ஊழல் எதிர்ப்புச் சட்டம்
குறித்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலமானது கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபசவினால் 2023 ஏப்ரல் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
இதன்படி 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டு, 2023 ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமாக (08.08.2023) செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றது.
எனினும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உட்பட பல தரப்பினர் சட்டமூலத்தின் உட்பிரிவுகளுக்குள் உள்ள குறைபாடுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளதுடன் சட்ட மூலமானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |