மருந்து தட்டுப்பாட்டுக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு: கெஹலிய ரம்புக்வெல நம்பிக்கை
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு
பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருந்து இறக்குமதிக்கு கிடைத்துள்ள உதவிகள்
"மருந்து வகைகளின் இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்துள்ளது.
மருந்துகளை கோரியதன் பின்னரே மருத்துவ நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி பணிகளை ஆரம்பிக்கும் என்பதால், மருந்துகளை இறக்குமதி செய்ய மூன்று மாதங்கள் ஆகும்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் அந்த நிறுவனங்கள் மருந்துகளை விநியோகிப்பதாக உறுதியளித்துள்ளன.
உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டைக்
கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா என்பன உதவிகளை
வழங்குவதாக அறிவித்துள்ளன" என கூறியுள்ளார்.