மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
மன்னார் - இலுப்பைகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கைபற்றப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எல். ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே, சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.
அதேநேரம் கேரள கஞ்சாவினையும், அதனைக் கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இதனைக் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இவர்களில் இருவர் வவுனியா - கூமாங்குளம் பகுதியையும், மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவருமான, 25,44,31 வயதுடைய நபர்கள் ஆகும்.
சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா,மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக
விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.






