இலங்கையின் பொருளாதாரத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் : உறுதியளித்த இந்தியா
இலங்கையின் (Sri Lanka) முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவித்தல் உட்பட அந்த நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்தியா (India) கூறியுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இருதரப்பு உடன்படிக்கைகள் எட்டப்பட்ட நிலையில் அந்த ஆதரவை இந்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலை
இந்த மைல்கல், இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியை நோக்கி நகர்வதிலும் அடைந்துள்ள வலுவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.
உத்தியோகபூர்வ கடனளிப்பவர்கள் குழுவான OCC (Official Creditor Committee ) இன் இணைத் தலைவர்களில் ஒருவராக, பிரான்ஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து, இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில், தாம் உறுதியாக இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில், இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியதன் மூலமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கிய முதல் கடனளிக்கும் நாடு இந்தியாவாகும்.
இதுவே, சர்வதேச நாணய நிதியத்திட்டத்தைப் பாதுகாக்க இலங்கைக்கு வழி வகுத்தது என்றும் இந்திய அரசாங்கம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |