ஆன்லைன் கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சஜித் தரப்பு இலவச சட்ட உதவி
ஆன்லைன் கடன் திட்டங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலமான கடன் வழங்கும் நடவடிக்கையானது சட்டவிரோத மாபீயா என சஜித் தெரிவித்துள்ளார்.
இணைய வழியில் கடன் பெற்றுக் கொள்வதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பெரும் நெருக்கடிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சில ஆண்டுகளுக்கு முன்னதாக அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அப்போதைய அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்ட வரைவுகளை முன்மொழியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த கடன் மாஃபியாக்கள் நாட்டில் தொடர்ந்தும் மோசமான முறையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கல் நிலைமை மக்களை கடன்பொறிக்குள் சிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆன்லைன் கடன் மோசடிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் தொடர்பான பூரண தகவல்கள் தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழுவொன்றை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
கடன் பெற்றுக்கொண்டு பாதிப்புக்களை சந்தித்தவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



