எரான் விக்ரமரத்னவை கட்சியிலிருந்து விலகுமாறு அறிவிப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரட்னவை கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கோரியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) நிர்வாக மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழுவின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட எரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு பதவிகளிலிருந்து விலகுவதாகவும் கட்சியில் உறுப்புரிமையில் தொடர்ந்தும் நீடிக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, விளையாட்டில் அரசியல்வாதிகள் ஈடுபடக்கூடாது என்ற கட்சியின் கொள்கை முடிவுக்கு இணங்க, எரான் விக்ரமரத்னவை கட்சியிலிருந்தும் முழுமையாக விலகுமாறு உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்டகால மறுசீரமைப்பைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்தக் குழுவில் குமார் சங்கக்கார, ரொஷான் மஹாநாம போன்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.