மண்ணெண்ணெய் தட்டுப்பாடு! கடற்தொழிலாளர்களின் அவல நிலை(Photos)
நாட்டில் நிலவி வரும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுமார் இரண்டரை மாதங்கள் தமது வாழ்வாதார தொழிலை இழந்து ஜீவனோபாயத்திற்கே வழியின்றி வாழ்ந்து வருவதாக கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோட்டைக்கல்லாறு கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடற்தொழிலாளர்களின் அவல நிலை
“எமது கடற்கரையை பொறுத்தளவில் சுமார் முப்பதிற்கு மேற்பட்ட மீன்பிடி படகுகள் இருக்கின்றன. இதனை நம்பி நூற்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீன் பிடியை மேற்கொள்கின்றோம். இந்த வருமானத்தின் ஊடாகவே எமது குடும்பத்தின் ஜீவனோபாயத்தை நடத்தி வருகின்றோம்.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர பிரச்சினை காரணமாக என்றும் இல்லாதவாறு அனைத்து பொருட்களின் விலையும் உயர்வடைத்துள்ளது.
இதேவேளை மண்ணெண்ணெய் இல்லாத பிரச்சினை எமது தொழிலை முற்றாக பாதிப்படைய செய்துள்ளது. இதனால் நாங்கள் குடும்ப ரீதியாக பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.”என கூறியுள்ளனர்.
மீன் வியாபாரிகளின் கருத்து
குறித்த கடற்கரையை நம்பி மீன் வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,“இந்த கடற்கரை மீன் பிடியை நம்பி ஐம்பதிற்கு மேற்பட்ட மீன் வியாபாரிகள் தொழிலினை மேற்கொண்டு வருகின்றனர்.
நாங்கள் வழமையாக ஐந்நூறு கிலோவிற்கு மேற்பட்ட மீன்களை பிடிப்போம். ஆனால் தற்போது தோணி மூலம் சிறிதளவு மீன்களே பிடிக்கப்படுகின்றன. இதனூடாக ஓரிரு வியாபாரிகளுக்கே தொழில் கிடைக்கின்றது. மற்றவர்கள் தொழிலின்றி திரும்பி வீடு செல்கின்றனர்.
இது மாத்திரமின்றி ஒரு கிலோ முந்நூறு ரூபாவுக்கு விக்கப்பட்ட சாளை மீன் தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இதனால் வறுமையுடைய மக்கள் சாதாரண மீனை உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் பலதரப்பினர் மிகவும் மோசமான பட்டினியை எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே அரசு மண்ணெண்ணையை கடற்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.”என கூறியள்ளனர்.