சினிமா பாணியில் தப்பிக்க முயற்சித்த சிரான் பாஷிக்: திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!
துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணியில் தீட்டிய மாபெரும் திட்டம் விமானம் மாறியதால் கைநழுவிப் போயுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரான் பாஷிக் தன்னை மாதிரியே உருவ அமைப்பைக் கொண்ட வேறு ஒரு நபரைத் தயார் செய்து, தான் பயணிக்கும் அதே விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரத் திட்டமிட்டிருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து உண்மையான சிரான் பாஷிக்குக்குப் பதிலாக அந்த போலி நபர் பொலிஸாரிடம் சரணடைந்து கைதாவது போலவும், அந்த இடைவெளியில் உண்மையான சிரான் பாஷிக் தப்பிப்பது போலவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
போலி நபர் பிடிபடும் நேரத்தில், உண்மையான சிரான் பாஷிக் வேறு ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அவர் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய் காவல்துறை சிரான் பாஷிக்கை நாடு கடத்துவது குறித்து இலங்கை காவல்துறைக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வழங்கியிருக்கவில்லை.
எனினும், துபாயில் உள்ள ஒற்றர் ஒருவர் மூலம் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. ஆனால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த விமானத்திற்குப் பதிலாக வேறு ஒரு விமானத்தில் சிரான் பாஷிக் அழைத்து வரப்பட்டதால், அவர் தயார் செய்து வைத்திருந்த போலி நபரை அந்த விமானத்தில் அனுப்ப முடியாமல் போயுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் குறித்த ஆள்மாறாட்ட சதித்திட்டம் முற்றிலும் தோல்வியடைந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தனியாக வந்து இறங்கிய சிரான் பாஷிக் பொலிஸாரிடம் நேரடியாகச் சிக்கிக் கொண்டார்.
ஈரானுக்கு ஆதரவாக துபாயில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தும் காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் துபாய் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சிரான் பாஷிச்சை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.