11இல் தபேலாவுடன் அறிமுகம்: 73இல் தபேலா உலகை விட்டு பிரிந்த ஷாகிர் ஹுசேன்
இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார்.
இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனில்லாமல் இன்று இரவு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய நாட்டின் தலைசிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான உஸ்தாத் ஷாகிர் ஹுசேன், 1951ம் ஆண்டு மார்ச் 9ம் திகதி மும்பையில் பிறந்தார்.
முதல் கச்சேரி
அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷியும் ஒரு சிறந்த தபேலா கலைஞர் ஆவார்.
சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஷாகிர் ஹுசேன், 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார்.
தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார். அதில் தனக்குச் சம்பளமாக ஐந்து ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணில் நினைவு கூர்ந்திருந்தார்.
விருதுகள்
வாழ்க்கையில் தாம் பெற்ற அந்த ஐந்து ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஷாகிர் ஹுசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவராவார்.
ஷாகிர் ஹுசேன் இசைத் துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு 1988ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2002இல் பத்ம பூஷன் மற்றும் 2023இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் ஐந்து கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |