முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி காலமானார்..
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (61), சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) பிற்பகல் காலமாகியுள்ளார்.
1965ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி பிறந்த அவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பல ஊடகங்களில் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராக ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 44,457 விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
2008ஆம் ஆண்டு “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற நூலை வெளியிட்ட அவர், உயிர் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து குடும்பத்துடன் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

பின்னர் இலங்கைக்கு திரும்பிய அவர், பல்வேறு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், 2024ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி இணைப்பாளராக நியமிக்கப்பட்டு கட்சியின் பிரசாரப் பணிகளில் செயற்பட்டார்.
அவரது மறைவு மட்டக்களப்பு அரசியல் மற்றும் ஊடகத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.