செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு
செம்மணி சித்துப்பாத்தி சமூகப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ்த் தேசிய மற்றும் சமூக சக்திகள் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (21.10.2026) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கு
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சித்து பாத்தி சமூக புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் "தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு காரணமாக இறந்திருக்கலாம்" என குறிப்பிட்டுள்ளமை தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் வியப்பில்லை.

ஆனால் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்திடமிருந்தும் இதனை விட வேறு ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது என்பதோடு; பேராசிரியரின் அறிக்கையானது சர்வதேச தலையீட்டை கோரும் தமிழர்களின் நியாயமான நிலைப்பாட்டுக்கு போதுமான சான்றாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
பாடசாலை மாணவி கிருஷ்ணாந்தி குமாரசாமி கொலை வழக்கின் குற்றவாளியான கோப்ரல் சோமரத்தின ராஜபக்ச "செம்மணி தொடர்பாக மேலும் பல உண்மை தகவல்கள் கொடுப்பேன் என்னை விசாரணைக்கு அழையுங்கள்"எனக் கூறி பல கடிதங்களை பல மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதிக்கு அனுப்பியும் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டதாக தெரியவில்லை.
யுத்த குற்றங்கள்
இச்சாட்சி "கொல்லப்பட்டவர்களை நாமே புதைத்தோம்" என கூறுவதோடு இக் குறிப்பிட்ட சாட்சி உயிரோடு இருக்கையிலேயே பேராசிரியர் ராஜ் சோமதேவா இறப்பு தொற்றுநோய், இயற்கை பேரழிவு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பான சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கலந்த சிந்தனை வெளிப்பாடு எனவும் கூறலாம்.

அத்தோடு செம்மணி சமூக புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களுக்கு அப்பால் சிறு பிள்ளைகளின் பாவனை பொருட்களோடு மேலும் பல சான்று பொருட்கள் கொலை கொடூரத்தை வெளிப்படுத்துகையில் இனப்படுகொலையை மூடி மறைக்கவும், படையினரை பாதுகாக்கவும் எடுத்திருக்கும் முயற்சியாகவே பேராசிரியரின் அறிக்கையை உற்று நோக்குவதோடு இதற்குப் பின்னால் அரசாங்கத்தின் உண்மை முகமும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம்.
சிங்கள பௌத்த பேரினவாத அரச பயங்கரவாத படைகளால் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இனப்படுகொலை, யுத்த குற்றங்கள், வலிந்து காணமலாக்கப்பட்டமை என்பவற்றிற்கான நீதி இதுவரை கிட்டாது மட்டுமல்ல மாற்றம் எனக் கூறி தமிழர்களின் வாக்குகளையும் சூறையாடிய தேசிய மக்கள் சக்தியிடமோ இனி வரும் வேறு எந்த அரசாங்கத்திடமோ இருக்கப்போவதில்லை என்பதையும் நாம் அறிவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.