தமிழர் பகுதிகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள்
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய தேசிய கல்லூரியில் வெளியாகிய தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் 61 மாணவர்களை சித்திபெற செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சைக்கு தோற்றிய 108 மாணவர்களில் 61 மாணவர்கள் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளதாகவும் இம்முறையும் நூறு சதவீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒரு மாணவன் 193 அதிகூடிய புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் இம்முறை கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் படி 58 சதவீதத்தினை கல்லூரி பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வவுனியா
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர்.
குறித்த பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் இரு மாணவர்கள் 184 புள்ளிகள் பெற்று முதல் நிலை பெற்றுள்ளனர்.
அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் ரவீந்திரதாசன் சரோன் மற்றும் அதே வலயத்தைச் சேர்ந்த தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நவரட்ணம் சகானன் ஆகியோர் 184 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.
பின்தங்கிய பாடசாலை
வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் ரமேஸ்குமார் தனுஸ்கா 165 புள்ளிகளையும், றொனால் றீகன் குயின்சிலின் 163 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இரு மாணவர்கள் சித்தியடைந்து அந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 43 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் நிலை உட்பட
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் 70 க்குக் குறைவான புள்ளிகளை 04 மாணவர்களே பெற்றிருக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் அதிகளவான மாணவர்களைச் சித்தியடைந்த பாடசாலையாக இது விளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சாளம்பைக்குளம் அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அந்தவகையில், முஹம்மத் மக்சூத் பாத்திமா நப்லா 176 புள்ளிகளையும், ரிஸான் பாத்திமா ரிஸ்கா 167 புள்ளிகளையும், அப்துல் ஜபரூத் பாத்திமா ஜெஸா 153 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.
செய்தி - திலீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவி; 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதல்நிலைபெற்று சாதனை படைத்துள்ளதுடன் அதிலும் இரண்டு இரட்டையர்களும் சாதனைபடைத்துள்ளனர்.
மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டவர் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆர்.ரித்திக்கா ஷமி (189 புள்ளிகள் ) என்பதுடன் இவருடன் உடன் பிறந்த இவரது சகோதரர் ஆர். ஸ்ரீகித் ரித்தேஷ் 181 புள்ளிகளை பெற்றுள்ளார்.
அதே போன்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டவர் அதே பாடசாலையினை சேர்ந்த வி. கேஷாலினி ( 186 புள்ளிகள் ) என்பதுடன் இவருடன் உடன்பிறந்த சகோதரி வி. கார்த்திகாயினி ( 164 புள்ளிகள் ) பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதோடு இப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கு 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய லி.பவக் ஷனா (177), சு.வேதுரிஜா (175), வி.துஷானா (173), வி.யக் ஷனா (169), ல.யுவக் ஷனா (169), சு.சுகேஸ் (162), சி.கேஷித் (154), தி.கியூமிகா (153) , நி. டிவிக்ஷா (150), ற.பவிஷ்னா (149) , ர. அபியேல் (148), இ.அபிலஷா (147) போன்ற மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
செய்தி - குமார்