முல்லைதீவில் சட்டவிரோத மணல் அகழ்வு : பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை
முல்லைதீவில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் அனுமதி பத்திர விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணல் ஏற்றிய இரண்டு உழவு இயந்திரங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி மண்ணகழ்வில் ஈடுபட்டுள்ளதாகவும், உழவு இயந்திரங்களை செலுத்திய சாரதி இருவரையும் நட்டாங்கண்டல் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாரதிகள் மீது வழக்கு தாக்கல்
உழவு இயந்திரங்கள் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, அதன் சாரதிகள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல பொலிசார் அனுமதித்துள்ளதாகவும், குறித்த உழவு இயந்திர சாரதிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 21-06-2023 அன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.