டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி
கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 37 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குச் சாவடிகளின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
நீதன் சண்முகராஜா 5174 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனு சிறிஸ்கந்தராஜா 3374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். முன்னாள் உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி நாடாளுமன்ற உறுப்பினராக (Ajax) பதவி ஏற்றதால் காலியாகியிருந்த அந்த இடத்தை ஷான் வகிக்கவுள்ளார்.
“நன்றி ஸ்கார்பரோ-ரக் பார்க். இது நீண்ட, சோர்வான, ஆனால் புத்துணர்ச்சி ஊட்டும் தேர்தல் பிரசாரம். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் எங்களுடன் உழைத்தனர்” என்று தனது வெற்றியைத் தொடர்ந்து நீதன் ஷான் எனப்படும் நீதன் சண்முகராஜா தெரிவித்துள்ளார். வாக்குச்சின்னங்கள் அகற்றப்பட்ட போதும், தொண்டர்கள் அதை மீண்டும் நிறுத்தியதைக் குறிப்பிட்ட அவர், “என் அணியின்மீது பெருமை கொள்கிறேன். இது பல தலைமுறைகள் இணைந்து உழைத்த பிரசாரம்” என பாராட்டினார்.
அவருடைய மனைவியும் இரண்டு மகன்களும் மேடையில் அவருடன் இணைந்தனர்.
“போட்டி என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல; அது கருத்துகளை பகிர்வதற்கும்” என மற்ற வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். “ஸ்கார்பரோ இனி புறக்கணிக்கப்பட முடியாது. எங்கள் குரல் நகரசபையில் கேட்கப்படும். தேவைப்பட்டால் உறுதியாக நிற்பேன். ஸ்கார்பரோவின் ஆறு பகுதிகளின் மக்களின் குரலாக நான் செயல்படுவேன்” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் அவர் இந்த நகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதான நீதன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



