தமிழ் மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருவது தமிழர்கள் மீதான சரத் வீரசேகரவின் வெறுப்பின் உச்சம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவரும், முன்னாள் கடற்படை அதிகாரியும், அமைச்சருமான சரத் வீரசேகரவின் கருத்துகள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருவது மாத்திரமன்றி, அவர் மீதான வெறுப்பையும் அதிகரித்துள்ளது.
யுத்தத்திற்கு பின்னராக கடந்த ஒரு தசாப்தத்தில், சரத் வீரசேகர தமிழ் மக்களுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினை விமர்சித்தும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் இனவாத சிந்தனையுடன் செயற்படுவதாகவும் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த பின்னணியில் கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுக்கொண்டார். இதற்கு இவரது இனவாத கருத்துக்களும் ஒருவகையில் காரணம் எனலாம்.
இந்நிலையில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு அதிகாரப் பகிர்வு அல்லது சமஷ்டி ஆட்சி முறைமை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருந்தாது எனத் தெரிவித்திருந்தார்.
அதனைவிட 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஒரு சமஷ்டி நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாகவும், நான் முற்றிலும் அதற்கு எதிரானவன் எனவும் அவர்ட பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இதற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் ஏழு தசாப்த போராட்டத்திற்கு ஆறுதல் பரிசாக கிடைத்த மாகாண சபை முறைமையும் நாட்டிற்கு அவசியமற்றது எனவும், மத்திய அரசாங்கத்தின் ஊடாக நாட்டை ஆட்சி செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்த விடயம், தமிழ்த் தலைமைகள் மற்றும் மக்களிடையே பெறும் அதிர்ச்சியையும், வெறுப்பையும் தோற்றுவித்திருந்து.
இவ்வாறான பின்னணியில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற சரத் வீரசேகர, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தேவைப்பாட்டிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாது எனத் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து பயங்கரவாதமும் தீவிரவாதமும் இல்லாமல் போகும்வரை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் நீடிப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் கைதுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்திருந்த அமைச்சர் சரத்வீரசேகர, பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் தடுப்பில் உள்ளவர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அச்சுறுத்தல்கள் காணப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும் என சரத் வீரசேகர கூறியிருந்தார். நாட்டில் தற்போதும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் காணப்படுவதால், அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை விசாரணை செய்வதற்கான சட்டங்கள் அவசியம் எனவும் இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உகந்த ஒன்றெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுமாறு தெரிவிக்கின்றது என்ற போதிலும் அவர்கள் பயங்கரவாதத்தை தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக இங்கு வரப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சட்டமாகவே கருதப்படும் இந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துதல் அல்லது இல்லாதொழித்தல் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கருத்து அமைந்திருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பது எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் உறுதிப்படுத்தப்படும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்காமல் இணை அனுசரணை வழங்கியதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புகழ்ந்து பேசுபவர்களை கைது செய்வதற்கான சட்டம் விரைவில் உருவாக்கப்படும் சரத் வீரசேகர மற்றுமொரு கருத்தை வெளியிட்டார். விடுதலைப் புலிகளை நாடாளுமன்றத்திலும்சரி வெளியிலும் சரி புகழ்ந்து பேசுபவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தீ தனிவதற்குள், இராணுவம் எவ்வித போர் குற்றங்களையும் செய்யவில்லை எனவும், நாடாளுமன்றத்தில் உள்ள சில தமிழ் உறுப்பினர்கள், சிங்கள மக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மனதில் வெறுப்புணர்வினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து இனவாத சிந்தனையுடன் தமிழர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்த, சரத் வீரசேகர, தமிழ் பேசும் மக்களின் ஏற்பாட்டில் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான, பேரணியை நீதிமன்றத் தடைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஊடாக அச்சுறுத்தி தடுக்க முடியாமல் போன நிலையில், பங்கேற்பாளர்களை கைது செய்யப்போவதாக எச்சரித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேரணிக்கு தனியார் தொலைகாட்சியில் பங்கேற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.' நாங்கள் தடை உத்தரவை பெற்றுள்ளோம். இப்போது இவர்களின் புகைப்படங்கள் எங்களிடம் காணப்படுகின்றன.
இவர்களின் வாகனங்களின் இலக்கங்கள் எங்களுக்குத் தெரியும். அவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடுத்து அந்த வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய முடியும். அவர்களை சிறையில் அடைக்கக்கூடிய இயலுமை எங்களுக்கு காணப்படுகின்றது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாறிருக்கையில், புலம் பெயர் அமைப்புகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெசயற்படுத்துவதாக சரத் வீரசேகர விமர்சனம் முன்வைத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை அந்தக் கட்சி வெளிநாடுகளின் பிரதிநிதிகளாகவே இலங்கையில் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேகர கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு எதிராக தமிழ்த் தலைமைகளும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்து வெளியிடப்படும் கருத்துக்களையும், அவ்வாறான கருத்துக்களை வெளியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முடிந்தால் தடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சவால் விடுத்திருந்தது. சரத் வீரசேகர தொடர்ச்சியாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், அவரது இனவாதக்கருத்துக்களை ஏற்றுக்கொள் முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேக வெளியிட்டு வரும் கருத்துக்களை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியே தவிர நாட்டுக்கு எதிரானது அல்ல என்பதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர புரிந்துக் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களுக்கு எதிராகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராகவும் சரத் வீரசேகர முன்வைக்கும் கருத்துக்களை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இனவாத சிந்தனையுடன் அவர் வெளியிடும் கருத்துகள் ஒருசில சிங்கள மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், பெரும்பாலான சிங்கள மக்கள் மற்றும் ஒட்டுமொத்தமான தமிழ் மக்கள் மத்தியிலும் வெறுப்பினையே ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளை இனவாத அல்லது தீவிரவாத அமைப்பு என்ற வகையில் சித்தரிக்கும் அவரது பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதே உண்மை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையின உறுப்பினர்களான சரத் பொன்சேகா போன்றோர் சரத் வீரசேகரவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்கும் இதவே காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு இனவாத சிந்தனையுடன் செயற்படுவதை அமைச்சர் சரத் வீரசேகர நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் தமிழ் மக்களின் எதிரியாகவே மாறியுள்ள அவர், சிங்கள மக்களின் எதிரியாகவும் மாற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்.



