பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (05.06.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பௌத்த துறவிகளின் துறவறத்திற்கு எதிரான செயற்பாடுகளாலும் , விகாரைகள் மற்றும் மடாலயங்களின் கட்டமைப்பு அதன் நிர்வாகம் தொடர்பான விடயத்திலும் பௌத்த சிங்களவர்கள் கோபமடைந்து வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை தோன்றிள்ளது.
கைது
புலி உருவாக்கம் மீண்டும் பேச்சுப் பொருளாகி உள்ள சூழ்நிலையில் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தியினர் வடக்கிலே தமது தேர்தல் வேட்டையின் போது விடுதலைப்புலிகளின் இயக்க பாடல்களை தமது தேர்தல் மேடைகளில் முழங்கி அரசியல் செய்த போதும் தமிழர்கள் அவர்களை குற்றவாளி கூண்டிலே நிறுத்தவில்லை.

ஆனால் சங்கீதன் எழுச்சி பாடல்கள் பாடியதை புலி உருவாக்கம் எனக் கூறி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
மாவீரர் நினைவேந்தல்
தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர் மத்தியில் தமிழர்களின் அரசியல் மீது ஆர்வம் கொண்ட மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு பரீட்சியமான எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது அதனை விடுவிற்கான சாத்தியப்பாடுகள் இருந்தும் அதனை விடுவிக்காது இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவேந்தல் என எழுச்சி கொள்ளும் தமிழர் தாயக மக்களே பாடகர் சங்கீதனுக்காகவும் எமது குரலை உயர்த்துவோம்.

கடந்த 17 வருட காலமாக எமக்குள் பிளவுகளை ஏற்படுத்திய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அகற்றிடவும் 2009 ஆம் ஆண்டு அழிவு நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படும் தமிழர்களின் அரசியலை பலப்படுத்தி முன்னோக்கி நகர்த்தவும் ஒன்றான சக்தியாக எழுச்சி கொள்வோம்.
எமது அரசியல் எழுச்சியே எமது விடுதலை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.