தென்மராட்சியில் தொடரும் மணல் அகழ்வு: இளங்குமரன் எம்.பி களவிஜயம்
யாழ்.- தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதி மற்றும் விளை நிலங்களில் அண்மைக் காலமாக சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்று முன்தினம் (22.12.2024) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சட்டவிரோத மண் அகழ்வு
குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளதோடு, பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர்.
இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் மண் வீதியிலும், வீதி ஓரங்களிலும் அகழப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறிருக்கையில், குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம், கரம்பகம் கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மண் அகழ்வு இடம் பெற்றுள்ள இடங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |