தையிட்டி காணி அளவீடு: கல்யாணத்துக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளையைக் காணவில்லை! கடுமையாக சாடல்
தையிட்டியில் காணி அளவீட்டுப் பணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் சந்திரசேகர் எங்கே போனார்? கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளையைக் காணவில்லை என்பது போல் அமைச்சர் சந்திரசேகர் ஏன் பிரசன்னமாகவில்லை.? அவர் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் காணி அளவீட்டுப் பணிகளுக்கான திகதியை வேறொரு தினத்துக்கு மாற்றியிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்திருக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டிக் காணிகளை அளவிடப் போவதாக காணி உரிமையாளர்களை வரவழைத்திருந்தார்கள். ஆனால் தையிட்டி விகாரையின் விகாராதிபதியால் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நில அளவைகள் நிறுத்தப்பட்டன.
உச்சகட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
காணி அளவீடு
மாவட்டச் செயலாளர் காணி அளவீட்டுப் பணிகளுக்கான நடவடிக்கைகளை உரிய முறைப்படி செய்தாரா என்ற சந்தேகம் எழுகின்றது. காதலர்கள் தொலைபேசியில் உரையாடுவது போன்று அரச அதிகாரிகள் தொலைபேசியில் உரையாடி நிர்வாக விடயங்களைக் கையாள முடியாது. காணி அளவீடு செய்யப் போவதாக அறிவித்தால் மக்கள் அதனைக் குழப்பி அளவீட்டுப் பணிகளை நிறுத்துவார்கள் என ஆளுந்தரப்பு நம்பியிருந்தது.
ஆனால் மக்கள் அவ்வாறு செய்யாது காணிகளை அளவீடு செய்து காணிகளை விடுவித்தால் போதுமென்ற மனப்பாங்குடனே செயற்பட்டார்கள். ஆனால் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி எதிர் மாறாகவே செய்யப்பட்டார். அளவீட்டுப் பணிகள் ஆரம்பமாவதற்கு முதல் நாள் இரவோடு இரவாக பலாலி பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற விகாராதிபதி அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார்.
விகாராதிபதி முறைப்பாடு செய்கின்ற போது அந்தக் காணிக்குரிய உறுதி இருக்கின்றதா என்பதைப் பொலிஸார் ஆராய்ந்த பிற்பாடே அந்த முறைப்பாட்டை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் பொலிஸார் இனவாதமாகவே செயற்பட்டிருக்கின்றார்கள். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணி உரிமையாளர்களுடைய காணிகளை அளவீடு செய்து காணி வரைபடங்களை வரைந்ததன் பிற்பாடு விடுவிக்கப் போவதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

அளவீட்டுப் பணிகளுக்கான திகதி
ஆனால் அளவீட்டுப் பணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் சந்திரசேகர் நேற்று எங்கே போனார்? கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளையைக் காணவில்லை என்பது போல் அமைச்சர் சந்திரசேகர் ஏன் பிரசன்னமாகவில்லை.? அவர் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் அளவீட்டுப் பணிகளுக்கான திகதியை வேறொரு தினத்துக்கு மாற்றியிருக்க வேண்டும். இல்லையெரில் அவர்களுடைய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது அந்த இடத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே ஆரம்பத்தில் இருந்தே காணிகளை அளவீடு செய்யப் போகின்றோம் என்பதைச் சூழ்ச்சி முயற்சியாகவே மேற்கொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியினர் படம் காட்டுவதற்காகவே மக்களிடம் வருகின்றனர். மக்களை ஏமாற்றுகின்றனர். யாழ். மாவட்ட அரச அதிபர் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. காணி உரிமையாளர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்தல்களை வழங்கி எல்லோருடனும் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும்.
தையிட்டி திஸ்ஸ விகாரை தூபி அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்றார்கள். அவர்களுடைய காணிகளை காட்டிக் கொடுத்தவர்கள் யார்? கருணா போன்ற துரோகிகள் இன்றும் எங்களுக்குள் இருக்கிறார்கள். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிப்பது என ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam