வைத்தியசாலையிலும் உணவை மறுக்கும் சுரேஷ் சலே
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே, வைத்தியசாலையிலும் உணவை உட்கொள்ள மறுத்து வருவதாக அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை நேரில் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சலே தொடர்ந்து உணவை உட்கொள்ள மறுத்து வருகிறார். தற்போது அவருக்கு சேலைன் மாத்திரமே ஏற்றப்பட்டு வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எங்களது சட்டத்தரணிகள் கவனித்து வருகின்றனர் என மனோரி சலே ஊடகங்களிடம் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது, தமக்கு மனிதாபிமானமற்ற முறையில் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி சுரேஷ் சலே சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் எவ்விதமான சித்திரவதைகளுக்கோ அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கோ உட்படுத்தப்படவில்லை எனவும், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே அவர் நடத்தப்படுகிறார் எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் இந்தத் குற்றச்சாட்டுகளைக் திட்டவட்டமாக மறுத்துள்ளது.