புடினின் அதிரடி அறிவிப்பு - சொந்த நாட்டை விட்டு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்
உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த மூன்று லட்சம் ரஷ்யர்களை இராணுவ அணி திரட்ட உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் அறிவித்திருந்தார்.
போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய இராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
எனினும் போருக்கு அணி திரட்டும் புடினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோர்ஜியாவுக்கு செல்லும் ரஷ்யர்கள்
ரஷ்யர்கள் தங்களின் அண்டை நாடான ஜோர்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷ்ய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜோர்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ரஷ்யா - ஜோர்ஜியா எல்லயைில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவில் இராணுவ அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்வதால், நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுப்பு
சனிக்கிழமையன்று 32 வெவ்வேறு நகரங்களில் 724 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்ய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத பேரணிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான புடினின் நடவடிக்கை நகர்ப்புறங்களில் பெரிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் மொஸ்கோவில், ஒரு ஆர்ப்பாட்டக்காரர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, "நாங்கள் பீரங்கித் தீவனம் அல்ல என்று கூச்சலிட்டார். ரஷ்யாவின் இரண்டாவது நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், ஒருவர் புடினுக்காக நான் போருக்கு செல்ல விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, சரணடைவது, இராணுவத்தை விட்டு வெளியேற முயற்சிப்பது அல்லது சண்டையிட மறுப்பது போன்ற எந்தவொரு சிப்பாய்க்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய ஆணையில் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார்
நாட்டின் இராணுவத்தில் ஒரு வருடம் பணியாற்ற கையொப்பமிடும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் ரஷ்ய குடியுரிமை வழங்கும் உத்தரவுகளிலும் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.