தந்தையை தாக்கி விட்டு 13 வயது மகனை துப்பாக்கியால் சுட்ட வன பாதுகாப்பு அதிகாரி
வீதியில் சென்ற டிப்பர் வண்டியை மறித்து, அதில் பயணம் செய்த நபரை தாக்கி விட்டு, 13 வயதான அவரது மகன் மீது இறப்பர் தோட்டாவுடன் கூடிய துப்பாக்கியால் சுட்ட வன பாதுகாப்பு அதிகாரியை கைது செய்து நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணியாற்றும் நொச்சியாகம, ரம்பவெவ பிரதேசத்தில் வசித்து வரும் 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தந்தையும் மகனும் மணலை ஏற்றி செல்ல டிப்பர் வண்டியில் நொச்சியாகம கட்டுபத்வெவ, கல்வல பிரதேசத்திற்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் டிப்பர் வண்டியை மறித்து, கதவை திறந்து வண்டியில் இருந்து இறக்கி கன்னத்தில் அறைந்ததுடன் துப்பாக்கியால் தாக்கியதாகவும் அப்போது மகன் கத்தி கூச்சலிட்ட போது, மற்றுமொரு நபர் பிள்ளையின் தலையில் துப்பாக்கியால் சுட்டதாகவும் தாக்குதலுக்கு உள்ளான நபர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் இரத்தம் சொட்டும் காயத்துடன் மகனை டிப்பர் வண்டியில் அழைத்துச் சென்று ராஜாங்கனை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை அதே வண்டியில் பிடித்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தாக்குதலுக்கு உள்ளான நபர் கூறியுள்ளார்.