லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பதவி விலகினார் ரிஷப் பந்த்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவராக இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். 2026 தொடரில் லக்னோ அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த நிலையில், தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என ரிஷப் பந்த் அணியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பதவி விலகல்
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அணியின் கிரிக்கெட் இயக்குநர் டோம் மூடி, “ரிஷப் இந்த கோரிக்கையை அணியிடம் முன்வைத்தார். அதனை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம்.
Official announcement. pic.twitter.com/7WeOwpkDr6
— Lucknow Super Giants (@LucknowIPL) May 29, 2026
இத்தகைய முடிவுகள் எளிதானவை அல்ல. தலைவராக அவர் அணிக்காக செய்த பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இனி அணியை மீள கட்டியெழுப்புவது மற்றும் சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதில்தான் எங்கள் கவனம் இருக்கும்” என தெரிவித்தார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக எட்டு பருவங்கள் விளையாடிய ரிஷப் பந்த், ஐ.பி.எல். 2025 வீரர் ஏலத்தில் 27 கோடி ரூபாவிற்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். பின்னர் அவர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும், 2025 பருவத்தில் 118 ஓட்டங்கள் அடங்கிய ஒரு சதம் விளாசியிருந்தாலும் மொத்தமாக 269 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அந்த பருவத்தில் லக்னோ அணி ஏழாவது இடத்தில் நிறைவடைந்தது.
தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்
ரிஷப் பந்த் தலைமை
2026 பருவத்திலும் அவரது துடுப்பாட்டம் பெரிய முன்னேற்றம் காணவில்லை. 13 இன்னிங்ஸ்களில் 312 ஓட்டங்கள் எடுத்த போதிலும், லக்னோ அணி 4 வெற்றிகள் மற்றும் 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் முடித்தது.

லக்னோ அணியின் முதல் மூன்று பருவங்களில் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்தியிருந்தார். இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவர், பின்னர் அணியிலிருந்து விலகினார்.
அதன் பின்னர் புதிய மாற்றத்திற்காக ரிஷப் பந்த் தலைமையை அணிநிர்வாகம் நம்பியிருந்தது.
ஆனால் இரண்டு ஏமாற்றமளிக்கும் பருவங்களுக்குப் பிறகு அந்த கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், லக்னோ அணியின் அடுத்த தலைவராக எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.