கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் - இராணுவ முற்றுகைக்கான காரணம் அம்பலம்
காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரும் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நள்ளிரவில் இராணுவ முற்றுகை
இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் திசையிலிருந்து இராணுவப் படையினர் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் நுழைவு வாயிலை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இராணுவ முற்றுகை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிடுகையில், முப்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை 1.30க்கும் 2.30க்கும் இடையில் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் நுழைந்து ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினர்.
பொலிஸார் விளக்கம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சகல கூடாரங்களையும் அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்ட பகுதிக்குள் பாதுகாப்பு படையினர் நுழையும் போதே, “இராணுவத்தினருடன் யாரும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள். போராட்ட களத்திற்கு சென்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுங்கள்” என பொலிஸார் எச்சரிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
ரணிலின் ஆசை
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை சத்தப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தான் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என நேற்று ரணில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை இரவோடு இரவாக செய்து முடிந்துள்ளனர்.