ஈழத் தமிழர்களின் மாவீரர் தினத்தை நினைவுகூர்வது நமது பொறுப்பு
ஈழப்போரில் வீரச்சாவடைந்து உயிரிழந்த மாவீரர்களை விசேடமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் நினைவு கூர்வது கடமையாகவும் உரிமையாகவும் உள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகங்களில் உள்ள மாவீரர்களின் துயிலுமில்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு தற்போது ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த பல வலிகளுடன் ஆத்மாக்களுக்காக நினைவஞ்சலியை கூட செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை கடந்த கால அரசாங்கங்களில் காணப்பட்டது.
நீதிமன்ற தடை உத்தரவு என்ற பேரில் அதனை மீறி நினைவேந்தலில் ஈடுபட்டால் பல கைதுகளும் இடம்பெற்ற வரலாறுகளும் உண்டு. தற்போதைய அநுர குமார அரசாங்கத்திலும் இந்த தடைகள் இடம்பெறுமா என்பது சந்தேகிக்கப்படுகிறது.
மாவீரர்கள் தினம்
இவ்வாறான நிலையில் இது குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில், "வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை தான் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. அந்த வகையில் உரிமைக்கான போராட்டத்தில் தங்களுடைய இன்னுயிர்களை நீத்த மாவீரர்கள் தினம் கார்த்திகை 27இல் அனுஷ்டிக்கப்படுகிறது.
கடந்த கால அடக்கு முறை காலத்திலும் கூட பலரும் இத் தினத்தை அனுஷ்டித்தே வந்தார்கள். இந்த முறையும் சாதகமாக இருப்பது போலத் தெரிகிறது. வடகிழக்கு மக்கள் கார்த்திகை 27ல் மாவீரர்கள் தினத்தை விசேடமாக உணர்வெழுச்சியுடன் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பார்கள் இதற்கான தடைகளற்ற சுதந்திரமான நிலையில் இது நடைபெறும்.

இதற்காக தமிழ் மக்களுடைய சகல ஒத்துழைப்புக்களுடனும் மாவீரர்களுக்காக அன்றைய நாளை நினைவு கூறுவதும் முக்கியமானதாக காணப்படுகிறது" எனவும் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியான முன்னேற்றம்
கடந்த யுத்த காலங்களின் போது மாவீரர்களின் உறவுகளும் வடக்கு, கிழக்கில் உடல் அவையவங்களை இழந்தும், முன்னால் போராளிகளாகவும் பெரும் பொருளாதார கஷ்டங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மாவீரர் தினத்தில் அவர்களின் நினைவாக மரக் கன்றுகளை வழங்குவது மட்டுமல்லாமல் அதற்கும் மேலாக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையக் கூடிய வாழ்வாதார உதவிகளையும் வழங்குவது சிறப்பாகும்.
பல துன்ப துயரங்களை அனுபவித்த உறவுகள் எவ்வித வருமானமும் இன்றி பல கஷ்டங்களை எதிர்நோக்குவதை காண முடிகிறது. தமிழ் தாயகப் பரப்பில் உள்ள துயிலுமில்லங்கள் கடந்த கால அரசில் இராணுவ முகாமாகவும் காணப்பட்டது. இந்த நிலையில் வடக்கு கிழக்கில் இந்த நிலை தற்போது வரை ஒரு சில துயிலுமில்லங்களில் இருக்கலாம் என்பது கவலையளிக்கிறது.
இது குறித்து முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கையில் "மாவீரர் தினம் என்பது தொடர்ச்சியாக 2009க்குப் பின்னர் 15 வருடங்களாக மக்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். எந்த அரசாங்கம் மாறி மாறி வந்தாலும் அதனை மக்கள் செய்வார்கள்.
கடந்த கால இக்கட்டான சூழ் நிலையிலும் கூட குறிப்பாக கோட்டாபாய, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் காலத்திலும் ஒவ்வொரு வருடமும் தடை உத்தரவுகளும் நீதிமன்றத்தால் தடை உத்தரவும் வந்தது அப்போது எனக்கும் தடை உத்தரவு கிடைக்கப்பெற்றது.
நினைவேந்தல்
ஆகவே தற்போதும் அதனை தொடர்ச்சியாக செய்து வந்தும் செய்யவும் உள்ளோம். இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மௌனமாக இருக்கிறது அதனை அவர்கள் விட்டுள்ளார்கள் என ஒன்றும் பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆகவே அரசாங்கம் மாறி இக்கட்டான காலங்களில் செய்த மாவீரர் தினத்தை போன்று இம் முறையும் மக்கள் அதனை செய்வார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதை செய்யாமல் தடுத்தாலும் கூட அதனை பெரிதாக நினைக்காது நினைவேந்தலை செய்வோம். அவர்கள் தடை போட்டாலும் மக்கள் செய்வார்கள் அதுதான் யதார்த்தம்" என கூறினார்.
சிங்கள மக்களில் இடது சாரி கொள்கை கொண்ட JVP அவர்களின் கார்த்திகை தினத்தை கொழும்பில் மேடை போட்டு சகல உரிமைகளுடனும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி நினைவுப் பேருரைகளை செய்தனர்.
இவ்வாறாக நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என கூறும் இவர்கள் தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் மதிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
உணர்வு
ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக மெழுகுவர்த்திகளின் ஒளியில் மலர்ந்த கண்ணீர்த் துளிகள், அந்த வீரர்களின் தியாகத்துக்காக அந்த நாளில் நினைவுகளாக அனுஷ்டிக்கப்படும். அன்றைய தினத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் அமைதியாக நின்று அகவணக்கத்துடன் நினைவு கூர்வார்கள். சிலர் தம் உறவினர்களை நினைத்து மெளனமாக கண்ணீர் விடுவார்கள்.
இது போன்ற தங்களை தாங்களே ஆற்றுப்படுத்தும் ஒரு நாளாக மாவீரர் தினம் காணப்படுகிறது. மாவீரர் தினம் வெறும் நினைவு நாளல்ல - அது நம் வரலாற்றின் நெஞ்சில் நிறைந்த ஒரு உணர்வு. வீரமரணமடைந்தோர் விட்டுச் சென்ற பாதை இன்று இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை, அன்பு, மற்றும் அமைதி என்ற மூன்று ஒளிகளாக விளங்குகிறது.
இந்த நாளில் உரிமைகளை அனுபவிக்க கூடிய வகையில் சுதந்திரமாக நினைவுபடுத்தலை மேற்கொள்ள எவ்வித தங்கு தடையுமின்றி ஒன்றினைவோமாக.