கோவிட் - 19 அச்சுறுத்தல்! - யாழில் அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் திரையரங்குகளை மூடவில்லை என்று எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் ஆராயப்பட்டது.
அதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றன என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 17 பேருக்கு கோவிட் - 19 தொற்று உள்ளமை இன்று (10) கண்டறியப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்.
மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றுபவர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சேர்க்கப்பட்ட நால்வருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சங்கானை வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.