கொழும்பு – தூத்துக்குடி இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை
தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்க, தூத்துக்குடி வஉசி துறைமுகம் திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மூலம் பல்வேறு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல, தூத்துக்குடி மட்டுமன்றி தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
சரக்குப் போக்குவரத்தில் ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவந்தபோதிலும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துளதாக தெரிவிக்கப்படுகிறது.
வணிகம் மற்றும் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும்
இது குறித்து தூத்துக்குடி ஹப் போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் தலைவர் ஜே.பி.ஜோ வில்லவராயர் கூறுகையில்,
தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சேவையை ஆரம்பித்தால், வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கம் கிடைக்கும் .
இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதிநிதிகள் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நாகப்பட்டினம்-காங்கேசன்துறை படகு சேவையை தேர்வு செய்யாமல், மீண்டும் தூத்துக்குடி- கொழும்பு சேவையை ஆரம்பிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று தூத்துக்குடி கடலோர இயந்திரமயமாக்கப்பட்ட பாய்மர கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ் லொசிங்டன் பெர்னாண்டோ கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |