சட்டத்துறை இறுதி வருட பரீட்சைகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை
கொழும்பு 05, லும்பினி கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும், நாடு முழுவதிலும் இருந்து, 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் சட்டத்துறை இறுதி வருடப் பரீட்சைகளை நிறுத்துமாறு, இணையத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது.
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள், இலங்கை சட்டக்கல்லூரியிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஆறு பாடங்களுக்கான பரீட்சைகள் முடிவடைந்துள்ளன. நாளை 2021, ஆகஸ்ட் ஆம் ஆண்டின் 13 ஆம் திகதி வணிகச் சட்டம் - 1) மற்றும் 17 ஆம் திகதி-வணிகச் சட்டம் - 2) ஆகிய பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இந்த இரண்டு பாடப் பரீட்சைகளையே இடைநிறுத்துமாறு மாணவர்கள் கோரியுள்ளனர். நாட்டின் கோவிட் எண்ணிக்கையில் அண்மைய அதிகரிப்பை அடுத்தே, இந்த இணைய மனுவில் கையெழுத்திட்டு வருவதாகச் சட்ட மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை, பிரதம நீதியரசர், சட்டக் கல்வியின் ஒருங்கிணைந்த சபை உறுப்பினர்கள் மற்றும் பிற அதிகாரிகளிடம் ஒப்படைக்க, சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் எதிர்ப்பார்க்கிறது. சட்டக் கல்லூரி நிர்வாக ஊழியர்களில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களின் முதல் தொடர்புகள் தனிமைப்படுத்தப்படாமல் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டுள்ளன. மேலும், எட்டு பரீட்சார்த்திகள் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
சட்டக் கல்லூரி நிர்வாகத்தால் அவர்களின் முதல் தொடர்புகளை அடையாளம் கண்டு தெரிவிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனிமைப்படுத்தல் விதிமுறைகளின்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், முதல் தொடர்புகளை அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்க நிர்வாகம் ஏன் தயங்குகிறது என்ற கேள்வியை, சட்டக்கல்லூரி மாணவர் சங்கம் எழுப்பியுள்ளது.
பரீட்சார்த்திகளில் பெரும்பாலான மாணவர்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள். அத்துடன் அவர்கள் கோவிட் தடுப்பூசியைப் பெறவில்லை என்பதால், அவர்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று மாணவர் சங்கம் கூறியுள்ளது.
யாழ்ப்பாணம், கண்டி, காலி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த மாணவர்கள் வருவதால், இவ்வளவு பெரிய குழுவிற்கு பரீட்சை நடத்த இது சரியான நேரம் அல்ல என்று மாணவர் சங்கம் தமது இணையக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.