புதிய ஜனாதிபதியும் எம்மை ஏமாற்றுகிறார் : குற்றம் சுமத்தும் காணாமல் போனோரின் உறவுகள்
காணாமல் போன தமது உறவுகளை தேடும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் எம்மை ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இன்று(30) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டம்
மேலும் தெரிவிக்கையில்,
எமது பிள்ளைகள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம்.
தாய்மாரின் கண்ணீர்
இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம்.
ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். கடந்த இடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார்.
ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம். இன்றுவரை பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூடவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும், கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார். அதன் வலி எனக்கு புரியும் என்றார். ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர் எடுத்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, காணாமல் போனவர்களது புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.
இதையடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூநது நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (30) இடம்பெற்றது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?, ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா, 15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா என பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் தாங்கியிருந்தனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும்.
2025 ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்த்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல்: தீபன், வசந்த ரூபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |