பிரித்தானியாவில் தலைமறைவான 10 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடியாணை
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பிரித்தானியா சென்று நாடு திரும்பாமல் அங்கு தலைமறைவான 10 வீரர்களுக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட உள்ளது.
விளையாட்டுத்துறையில் தவறான நடத்தைகளை தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இதனை வெளிப்படுத்தியது.
குறித்த வீரர்களால் அரசாங்கத்திற்கு சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணத் தடை
இதனையடுத்து 10 வீரர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதுடன், சிவப்பு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசேல டி சில்வா, சமிலா திலானி, எஸ். சதுரங்கா, ஒய். நிக்லஸ், அஷேன் ரஷ்மிகா, எஸ். மலிந்த, ஸ்ரீயந்திகா பெர்னாண்டோ, சஞ்சீவ ராஜகருணா, ஜீவந்த விமுக்தி குமார ஆகியோர் விளையாட்டு வீரர்களாகும்.
இந்த விளையாட்டு வீரர்கள் 2022 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றிருந்தனர்.
குற்றச்சாட்டுகள் பதிவு
மேலும் போட்டியில் பங்கேற்க சென்ற போதும் போட்டிகளில் பங்கேற்காத நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விளக்கமளித்த விசாரணை அதிகாரி, போட்டிகளில் பங்கேற்காமல் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் 24 ஆம் எண் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 6 இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



