அரச துறைக்கு மீண்டும் ஆட்சேர்ப்பு!
அடுத்த ஆண்டில் அரச துறைக்கு மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க இரண்டு தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு பொதுத்துறை ஆட்சேர்ப்புகளை முடக்க அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
ஓய்வூதிய வயது
பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 65இல் இருந்து 60ஆக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இந்த முடிவு காரணமாக முக்கியமான பணிகளில் ஆட்கள் இல்லாதது குறித்து மருத்துவத்துறை உள்ளிட்ட சில துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஓய்வூதிய வயதை குறைப்பதன் மூலம் 25,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்துறையில் இருந்து வெளியேறவுள்ளனர். மருத்துவத்துறை மட்டுமின்றி, நிர்வாகத்துறையும் இந்த ஓய்வு பெறுதல் செயல்பாட்டால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு திட்டங்கள்
ஏற்கனவே திட்டமிடப்படாத ஆட்சேர்ப்பு திட்டங்களால் பொதுத்துறையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில் பயிற்சி பெறாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதும் பொதுத்துறையை பாதித்த திட்டங்களில் ஒன்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறு ஊழியர்களை அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்வதும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சுமார் 1.5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக
மாதம் ஒன்றுக்கு 93 பில்லியனுக்கும் அதிகமாக அரசாங்கம் செலவிடுவதாக
மதிப்பிடப்பட்டுள்ளது.