கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
இரண்டு கைகளை பின்னால் கட்டி விட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை இங்கிரிய பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
காட்டில் போடப்பட்டிருந்த சடலம்
இங்கிரிய இரத்தினபுரி வீதியில் நம்பபான கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த நிலையில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
40 முதல் 50 வது மதிக்கத்தக்க இந்த நபரின் இரண்டு கைகள் கறுப்பு பட்டி மற்றும் வெள்ளை நிற பனியனை பயன்படுத்தி பின்புறம் கட்டப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்-சந்தேகிக்கும் பொலிஸார்
உடலின் மேல் பகுதி திறந்த நிலையில் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தாகவும் வேறு ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடலை கொண்டு வந்த இந்த இடத்தில் இன்று அதிகாலை போட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்த சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மனித எலும்புகள் சிலவற்றை பொலிஸார் மீட்டிருந்தனர். சம்பவம் தொடர்பாக இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.