வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட நல்லையா வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்த செல்வரெட்னம் குலேந்திரன் என்னும் 73வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கணக்காளராகக் கடமையாற்றி வருவதாகவும் ஊரடங்கு காரணமாகத் தொழிலுக்குச் செல்லா நிலையில் வீட்டிலிருந்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நோய்வாய்ப்பட்டு மருத்துவச்சிகிச்சையும் பெற்றுவந்த நிலையிலேயே கட்டிலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவரெட்னம் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தினை பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

