நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் வாக்குமூலம் பதிவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் ஒட்டுசுட்டான் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஒட்டுசுட்டான் பகுதியில் பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தனது வாக்குமூலத்தில், தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பில் நேற்று காலை மன்னாரிலும், நேற்று மதியம் வவுனியாவில் வைத்தும் செல்வம் அடைக்கலநாதனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




