மலையக அரசியல் அரங்கம் கட்சியாக அங்கீகாரம்
கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கி வந்த மலையக அரசியல் அரங்கம் இலங்கை தேர்தல்கள் ஆணையகத்தால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.
மலையக அரசியல் அரங்கத்தின் ஊடகச் சந்திப்பு நேற்று ஹட்டனில் இடம்பெற்றது. இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மலையக அரசியல் அரங்கம்
"மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை வளர்த்தல், ஆண்களுக்கு சமாந்திரமாக பெண்களுக்கும் சம வாய்ப்பு அளித்தல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலமாக செயற்படுதல் எனும் பிரதான இலக்குகளைக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கிவந்த மலையக அரசியல் அரங்கம் 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன் 'சிறகு' சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் உரிமை சார்ந்த அரசியல் முனவைப்புக்கான தேவை எப்போதும் இருந்து வருகின்றது. 2026 ஆண்டு அரங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக நிர்வாக 'மலையக பக்கங்களின் உரிமைக் கோரிக்கை: நிலமும் நிர்வாகமும்' எனும் தொனிப்பொருளில் மலையக மாவட்டங்கள் தோறும் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்துவதற்கும் 2026 ஆண்டு இறுதியில் மலையக மக்களின் டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னான மதிப்பீட்டறிக்கையையும் தயார் செய்து 'மலையகத் தீர்மானம்' ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கும் சர்வதேச அரங்குக்கும் கொண்டு செல்வதற்கும் தீர்மானித்துள்ளோம்.
மாகாண சபையில் மலையக மக்களுக்கு உரிமை
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா எந்த முறைமையில் நடைபெறும் என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசு அதற்காகக் குழு ஒன்றை நியமித்துள்ளது.
இப்போதைய மாகாண சபையில் மலையக மக்களுக்கு உரிமைகள் ஏதும் குறித்து வைக்கப்படவில்லை. அத்தகைய அதிகாரங்கள் எவ்வாறானதாக அமைதல் வேண்டும் எனும் அடிப்படையில் உடன்பாடுடைய அமைப்புகளுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிடவும் தயாராகவுள்ளோம்." - என்றார்.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு