பால் மா மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட காரணம் இதுவே! - அரசாங்கம்
மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் காரணமாகவே நாட்டில் பால் மா மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் பால் மா மற்றும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கு அரசாங்கத்தின் நிர்வாகத்திறன் இன்மை காரணமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான வகையில் நிறுவனங்கள் பொருட்களுக்கான விலைகளை உயர்த்த அனுமதியளிக்காத காரணத்தினால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வரையில் எரி வாயுவிற்கான விலையை அதிகரிக்க இடமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துறையைப் போன்று தனியார் துறையினரால் உலக சந்தை மாற்றங்களுக்கு அமைய விலை ஏற்றம் செய்யாது விற்பனை செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இன்னும் சில நாட்களில் எரிவாயு மற்றும் பால் மா ஆகியனவற்றின் விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.