கோட்டைக்கேணி தொடக்கம் பறையனாறு வரையான வீதிச் சீரமைப்பு விரைவில் ஆரம்பம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி தொடக்கம், தென்னமரவடி பறையனாற்றுப் பாலம்வரையிலான வீதி சீரின்மையால் குறித்த பகுதியிலுள்ள விவசாயிகள் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்தநிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர் கோரிக்கையினையடுத்து குறித்த வீதியை சீரமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகளின் அழைப்பை ஏற்று குறித்த பகுதிக்கு சென்ற துரைராசா ரவிகரன் விவசாயிகளோடு இணைந்து சீர்செய்யப்படவுள்ள குறித்த வீதியை நேற்றையதினம் (8) பார்வையிட்டிருந்தார்.
வீதி சீரமைப்பு
இதன்போது அப்பகுதி விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் எல்லைக்கிராம விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், இந்த வீதி அமைக்கப்படவேண்டுமென்ற எனது தொடர்ச்சியான கோரிக்கைக்கு செவிசாய்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த வீதிச் சீரமைப்பு விடயத்தில் கரிசனையோடு செயற்பட்ட வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உரிய தரப்பினர் நடவடிக்கை
அந்தவகையில் கட்டங்கட்டமாக இந்த வீதியைச் சீரமைப்பதாக உரியவர்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கோட்டைக் கேணியிலிருந்து, நாயடிச்சமுறிப்பு வரையிலும், அடுத்த கட்டமாக நாயடிச்சமுறிப்பிலிருந்து பறையனாற்றுப் பாலம் வரையிலும் வீதியைச் சீர்செய்வதெனத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக உரியவர்களால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக இந்த வீதி சீரமைக்கப்படுவது இப்பகுதி தமிழ் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
தற்போது இப்பகுதியில் ஏறத்தாள 3000ஏக்கர்வரையில் மானாவாரி பயிற்செய்கை நிலங்களில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.
இந் நிலையில் குறித்த வீதிச் சீரமைப்பையடுத்து இன்னும் மேலதிகமாக 1000ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.
எனவே இவ்வீதியைச் சீரமைப்பதற்குரிய அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ள சூழலில், விரைந்து இவ்வீதியைச் சீரமைப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





