ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக ரவி கருணாநாயக்க
ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீண்டும் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கருணாநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையானோர் முன்மொழிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கருணாநாயக்கவுடன் ஏற்கனவே இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக்கட்சி மறுசீரமைப்பு
இதற்கிடையில் ஐக்கிய தேசியக்கட்சியை மறுசீரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நாளை (செவ்வாய்க்கிழமை) கருணாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோவின் பெயர் முன்மொழியப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து, ஹரின் பெர்னாண்டோ, எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்டார்.
இதேவேளை ரவி கருணாநாயக்க
மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகிய இருவருமே தமக்கான பதவிகளை ஏற்க இணங்கினார்களா
என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த பொதுத் தேர்தல் தோல்வியின் பின்னர், ரவி கருணாநாயக்க பெரும்பாலும்
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.