தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த ஜே.வி.பியினர் முயற்சி - முன்னாள் அமைச்சர் சம்பிக்க குற்றச்சாட்டு
இலங்கையில் தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி. முயற்சித்து வருகின்றது. இதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"1982 இல் அரச சொத்துகளுக்குக் கட்சியொன்று சேதம் விளைவித்ததால்தான், சட்ட நடவடிக்கையின் நிமித்தம் பொதுச் சொத்து சட்டம் கொண்டுவரப்பட்டது.
ரணில் கைது விவகாரம்..
2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்காக வீதியில் இறங்கிய கட்சிதான், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்துள்ளது.
தனிக்கட்சி முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சியின் மற்றுமொரு அங்கமே ரணில் விக்ரமசிங்கவின் கைதாகும். எனவே, அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.
அவ்வாறு இல்லையேல் 1987 மற்றும் 1989 காலப்பகுதியில் அவர்களால் செய்ய முடியாமல்போன தனிக்கட்சி ஆட்சி முறைமையை உருவாக்குவதற்கு முற்படக்கூடும்" என தெரிவித்துள்ளார்.



