ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாலேயே ரணிலுக்கு ஆதரவு
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ரணிலிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம்(6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிகள்
மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதோடு தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்கவில்லை.
அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |