ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்துவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்துவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீலுடன் இன்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான, தமது அரசாங்கத்தின் முயற்சிகளையும் அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்றுமதி பொருளாதாரம்
இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகவும், அதேவேளை அவுஸ்திரேலிய சுற்றுலாவை இலங்கைக்கு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் தமது அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக அமைச்சர் ஓ நீல் தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கம் அதன் கப்பல் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யத் தயாராகி வருவதாக விளக்கிய அமைச்சர், கடல் பாதுகாப்பு மற்றும் மனித கடத்தல் தொடர்பான தனது நிர்வாகத்தின் கொள்கையை விளக்கியுள்ளார்.
இதன்போது மனித கடத்தலை நிறுத்துவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படையினரும் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கும் மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்ப்பையும் உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இலங்கைக்கு $50 மில்லியன் அபிவிருத்தி-உதவி வழங்கியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றிகளை இதன்போது தெரிவித்தார்.
இலங்கையின் நெருக்கடிக்கு அவுஸ்திரேலியா உதவும்:உள்துறை அமைச்சர் |