மோடிக்கு எதிராக உயர்த்தப்பட்ட கறுப்புக் கொடி எங்கே? ரணிலின் தான சாலை போன்றதா கோட்டாபயவின் தான சாலை?
கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்ட கோஷமாக இருந்தது என்ன? தனியார்மயப்படுத்தல், அரச வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான சிகப்பு மே தினக் கூட்டம். தற்போது பொருளாதார அபிவிருத்தி நோக்கிய போராட்ட கோஷமாக திரும்பியுள்ளது.
தற்போது அரசாங்கத்தை நடத்துவது ஜே.வி.பியினர். போராட்ட கோஷத்தின் கோஷம் மாறியுள்ளமை எதனை காட்டுகிறது. வரிசை மாறியுள்ளது என்பதை தானே?
ரணில் விக்ரமசிங்க, இலங்கையை இந்தியாவின் காலனியாக மாற்ற முயற்சித்து வருகிறார். அதோ ரணில் இந்தியாவுக்கு செல்கிறார். திருகோணமலை துறைமுகத்தை விற்பனை செய்ய போகும் நேரம். ரணில் இந்தியாவுக்கு சென்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். முழு திருகோணமலை நகரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எண்ணெய் தாங்கிகளை மாத்திரமல்ல. ஹனுமன் பாலத்தை நிர்மாணிக்க பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எமது அடையாளத்தை அழித்து இந்தியர்களால் நாட்டை நிரப்பவே உடன்படிக்கை செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி இலங்கை வருகிறார். அவர் இங்கு வருவது வெசாக் தோரணங்களை பார்ப்பதற்கு அல்ல. ஆனால், அதற்கு தான் வருகிறார் என கூறுகின்றனர்.
நாட்டை காட்டிக்கொடுக்கும் அடுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட அவர் வருகிறார். இந்த காட்டிக்கொடுப்புக்கு எதிராக மோடி அறியும் வகையில் நாடு முழுவதும் கறுப்புக் கொடிகளை ஏற்ற வேணடும். முழு நாடும் எழுந்து காட்டிக்கொடுப்புக்கு இடமளிக்க போவதில்லை என்பதை காட்ட வேண்டும். ரணில் தான சாலையை திறந்து வைத்துள்ளார். அதில் இந்தியர்களுக்கு மட்டுமே சாப்பிட முடியும். தானம் என்பது இந்த தாய்மண். இந்த புண்ணியபூமி. விமல் வீரவங்ச (2017-05-01) அன்று காலிமுகத் திடல், கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கூறிய கதை இது.
விமல் வீரவங்ச அன்று 2017 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக மாறிய கூட்டு எதிர்க்கட்சியின் காலிமுகத் திடல் பொதுக் கூட்டத்தில் கூடியிருந்த மக்களை குஷிப்படுத்தும வகையில், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை தம்வசப்படுத்த வரும் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறு கூறினார். அப்படியானால், விமல் வீரவங்ச முக்கிய அமைச்சு பதவியை வகிக்கும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மாத்திரமல்ல, எரிபொருளை விநியோகிக்கும் ஏகபோக அதிகாரத்தையும் இந்தியாவுக்கு வழங்க முயற்சிக்கும் போது, விமல் வீரவங்ச ஏற்றப் போவது எந்த கொடியை?
மாறி வரும் ஜே.வி.பியின் வரிசை பற்றி பேசிய வீரவங்சவின் வரிசை தற்போது துண்டிக்கப்பட்டு விட்டதா?. ரணிலின் தான சாலை போன்றதா கோட்டாபயவின் தான சாலை?. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு விற்று, எரிபொருள் விநியோகத்தின் ஏகபோக உரிமையை இந்தியாவுக்கு வழங்கி, கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகள் முஸ்லிம் நாடுகளுக்கு விற்பனை செய்யும் கோட்டாபயவின் தான சாலையில் விமல் வீரவங்சவும் உணவு சாப்பிடுகிறாரா?
அன்று காலி முகத்திடலில் நடந்த கூட்டத்தில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, மகிந்த ராஜபக்ச மாத்திரமல்ல முழு பொதுஜன பெரமுனவும் மோடிக்கு திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை வழங்கும் அரசாங்கத்தின் தேசத்துரோக சதித்திட்டத்திற்கு எதிராக அணித்திரளுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.
இந்தியாவுடன் இணைந்து இலங்கையின் தந்திரோபாய முக்கியத்துவமிக்க திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை கூட்டாக நிர்வாகம் செய்வது மிகப் பெரிய காட்டிக்கொடுப்பு. திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் நாட்டின் தேசிய சொத்து. அதனை விற்பனை செய்வதை எதிர்ப்பது தேசப்பற்றாளர்களின் கடமை என மகிந்த ராஜபக்ச( 2017-05-01) காலிமுகத்திடல் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
அன்று விமல் வீரவங்சவுடன் இணைந்து மோடியின் வருகைக்கு எதிராக கறுப்புக்கொடியை ஏற்றுமாறு கூறிய உதய கம்மன்பில தற்போது எரிசக்தி அமைச்சர். எண்ணெய் தாங்கிகளை நிர்வாகம் செய்ய இந்தியாவுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக கம்மன்பில கூறுகிறார். அவர் இதனை இலங்கை ஊடகங்களிடம் கூறவில்லை இந்தியாவின் இந்து பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு ரணில் இந்தியாவுக்கு விற்பனை செய்த எண்ணெய் தாங்கிகளை மீண்டும் கையகப்படுத்த இந்தியா தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாக உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராக பதவியேற்றதும் கூறினார். அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவுக்கு வழங்கிய திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆரம்பமான பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்தது. இந்திய உயர்ஸ்தானிகர் மிகவும் நெகிழ்வு போக்கை கொண்டிருந்தார் என்பதை கூற மகிழ்ச்சியடைக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனை நீக்க உயர்ஸ்தானிகர் இணங்கினார்.
2003 ஆம் ஆண்டு நாம் இழந்த திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீண்டும் எமக்கு கிடைக்கும் என்பதை பெருமையுடன் கூறுகிறேன். இந்த எண்ணெய் தாங்கிகள் மீண்டும் கிடைப்பதையிட்டு, நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.” என உதய கம்மன்பில (2021-02-18) கொலன்னாவையில் தெரிவித்திருந்தார்.
இராணுவம் பிரபாகரனிடம் இருந்து நாட்டை மீட்டது போல், தான் இந்தியாவிடம் இருந்து எண்ணெய் தாங்கிகளை மீட்டு விட்டதை போன்ற தொனியில் கம்மன்பில இந்த கதையை நாட்டுக்கு கூறியிருந்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயத்தில் நெகிழ்வாக நடந்துக்கொண்டார் என்றும் அவர் கூறியிருந்தார். இப்படி கூறிய கம்மன்பில சரியாக ஒரு வருடம் கூறி கடந்துச் செல்லவில்லை. இந்து பத்திரிகையிடம் இப்படியும் கூறியிருந்தார்.
“ நாங்கள் 16 மாதங்களாக இது சம்பந்தமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டு வருகின்றோம். திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியின் அபிவிருத்திக்காக இந்தியாவுடன் ஒரு மாதத்தில் உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளோம்” (உதய கம்மன்பில 2021-12-27 -இந்து பத்திரிகை) அட கடவுளே இது என்ன கொடுமை.... எண்ணெய் தாங்கிகளை எமக்கு மீண்டும் வழங்க இந்தியா இணங்கியதாக கம்மன்பில அன்று தெரிவித்திருந்தாரே.... இந்திய உயர்ஸ்தானிகரும் நெகிழ்வு போக்கை கையாண்டார் என கூறினாரே...? அப்படியானால் நெகிழ்வாக நடந்துகொண்டது இந்திய உயர்ஸ்தானிகர் அல்ல உதய கம்மன்பில... இது நெகிழ்வு போக்கு அல்ல,
இரண்டு, மூன்று, நான்கு என வளைந்து கொடுப்பது. இது 2017 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அப்பால் சென்று எரிபொருள் விநியோகத்தின் ஏகபோக உரிமையை இந்தியாவுக்கு வழங்கிய செயல்....! அப்படியானால் எங்கே விமல் வீரவங்சவின் கறுப்புக்கொடி...? மக்களால் இந்த கேள்வியை மாத்திரமே எழுப்ப முடியும்.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
