மக்கள் மீது அக்கறை இல்லாத ரணில்: இராமலிங்கம் சந்திரசேகரன்
தமிழ் கட்சிகள் இந்த நேரத்தில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்றையதினம் (02.10.2023) அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 75 வருடங்களாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கவில்லை.
அரசாங்கம் நிறைவேற்றவில்லை
தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தங்களுடைய பகடை காய்களாக உருவாக்கின்றனர். தமிழ் மக்களை இந்த நிலைமைக்கு தள்ளிய பாவித்தனமான நடவடிக்கை எடுத்தவர்கள் வேறு யாரும் அல்ல இந்த ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சகளின் ஆட்சியே.
அதனால் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் மிகவும் தெளிவாக சொல்லுகின்றோம், இனிமேலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அல்லது ராஜபக்சாக்களுக்கு அழுது அழுது வருகின்ற எந்த ஒரு வேட்பாளர்களையும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றார்கள், அதாவது தங்களால் விதிக்கப்பட்டிருக்கின்ற நிபந்தனை அல்லது தாங்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற ஆலோசனைகளை இந்த அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கின்றார்கள்.
அனைத்து துறைகளும் வீழ்ச்சி
அதன்படி அவர்கள், நாட்டில் இருக்கின்ற வருமானத்துக்கும் செலவுக்குமிடையே பாரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் அந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கின்றோம் என்றனர். கட்டிட தொழில் துறையை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு நூற்றுக்கு 70 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.
இவ்வாறு பார்க்கின்ற பொழுது நாட்டில் இருக்கின்ற அனைத்து துறைகளும் வீழ்ச்சியிலேயே இருக்கின்றது அதன் அடிப்படையிலேயே இன்றைக்கு இவர்கள் மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
அந்த நடவடிக்கை அடிப்படையில் இவர்கள் கடந்த காலங்களில் வரி சுமை அதிகரித்தார்கள். அதேபோன்று விலைவாசிகளை அதிகரித்தார்கள். அதேபோன்று வங்கிக்கான வட்டி வீதத்தை அதிகரித்தார்கள்.
இவைகளை அதிகரிப்பதன் மூலமாக மக்களுடைய தலையில் இடியை வீழ்த்திய நபராக இன்றைக்கு ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த சர்வதேச நாடுகளின் இலங்கையினுடைய பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, அல்லது நாட்டினுடைய வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்போது எரிபொருள் விலை அதிகரித்திருக்கின்றது.
இன்றைக்கு பெட்ரோல் விலை அதிகரிப்பின் மூலமாக, கேஸ் விலை அதிகரிப்பின் மூலமாக மீண்டும் மக்களை நடுரோட்டில் தள்ளுகின்ற பாவித்தனமான, மக்கள் மீது அக்கறை இல்லாதவனாக இன்றைக்கு இந்த ரணில் விக்ரமசிங்க மாறியிருக்கின்றார் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |