கோட்டாபய மீதான அவமதிப்பு குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சருக்கு விடுதலை
கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பான விசாரணைகள் இன்று (29.11.2024) இடம்பெற்ற நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு அமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட வழக்கு விசாரணை
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷ்சங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்குதல், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஊழல் செயலைச் செய்தமை தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |