அடுத்த வாரிசினை தேடும் ராஜபக்சவினர்
தமது அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறு அடுத்த வாரிசைத் தேடுவதே ராஜபக்ஷவினரின் தேவையாக இருக்கின்றதே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அவர்கள் அக்கறை காண்பிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகவே அதன் விலைகளை அதிகரித்திருப்பதாகக் கடந்த வாரம் அரசாங்கம் கூறியது. அவ்வாறெனின் தற்போது பொதுமக்களின் பால்மா நுகர்வைக் குறைத்து, அவர்கள் தேநீர் அருந்துவதை ஊக்குவிப்பதற்காகவா பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதாகக்கூறிய தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின்கீழ் பால்மா விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பால்மா விலையதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அதனைத் தடு;ப்பதற்கோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகயையும் எடுக்கவில்லை. பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்திலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்வதாக அண்மையில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதேபோன்று பொதுமக்கள் இயலுமானவரை உணவுப்பொருள் நுகர்விலிருந்து விலகியிருக்கவேண்டும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் கூறுகின்றார்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது அதன் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவே அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
எரிபொருள் விலையதிகரிப்பின் மூலம் அநாவசியமான பயணங்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்வார்கள் என்று வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனூடாக டொலர் விரயமாவதைக் குறைத்துக்கொள்ளமுடியும் என்றும் அரசாங்கம் கூறியது.
இந்நிலையில் தற்போது பொதுமக்களின் பால்மா நுகர்வைக் குறைத்து, அவர்கள் தேநீர் அருந்துவதை ஊக்குவிப்பதற்காகவா பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், எதிர்வருங்காலங்களின் அதன் கிடைப்பனவும் கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகின்றது. பால்மா விலையதிகரிப்பின் ஊடாக சந்தையில் போட்டித்தன்மையொன்று உருவாகும் என்றும் அதன்மூலம் மீண்டும் விலை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும் நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக கொடுப்பனவுகளைச் செலுத்தமுடியாமையால் பால்மாவை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றார்கள்.
நாளாந்தம் பதிவாகும் பொருட்களின் விலையதிகரிப்பால் பொதுமக்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்பதுடன் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை.
இவையனைத்திற்கும் நாட்டின் செயற்திறனற்ற பொருளாதார நிர்வாகமே பிரதான காரணம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
சீன உரத்திற்காக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் சிறுபிள்ளைகளுக்கு அவசியமான பால்மாவைப் பெற்றுக்கொடுக்கமுடியாது போயுள்ளமை மிகவும் துரதிஷ்டவசமான விடயமாகும்.
உள்நாட்டு திரவப்பால் ஏற்றுமதி மூலமான டொலர் கிடைப்பனவினால் திரவப்பால் சந்தைகளுக்கு அனுப்பப்படுவதென்பது சிக்கலானதாக மாறியிருக்கின்றது.
உள்நாட்டு பால்மா உற்பத்தியான பெலவத்த பால்மாவை விநியோகித்த மிரிஹான விற்பனை நிலையம் மூடப்பட்டிருக்கின்றது.
பால்மாவைக் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள் அவ்வீதியின் ஊடாகப் பயணித்த அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியமையே அதற்குக் காரணம் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது உண்மையென்றால், அரசாங்கம் மக்களைப் பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றது என்றே கூறவேண்டியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கவேண்டிய நிதியமைச்சர் விடுமுறையைக் கழிப்பதற்காக அவர் தனது முதலாவது தாய்நாடாகக் கருதும் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கின்றார்.
எனவே தமது அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காகத் தமது அடுத்த வாரிசை தேடுவதே ராஜபக்ஷவினரின் தேவையாக இருக்கின்றது.
மாறாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கின்றது.
நாட்டுமக்களுக்கு என்ன நேர்ந்தாலும், அவர்கள் தனிப்பட்ட ஜெட் விமானங்களைப் பயன்படுத்துவார்கள். தமது தேவைக்கேற்றவாறு வெளிநாட்டுப்பயணங்களில் ஈடுபடுவார்கள். அச்சந்தர்ப்பங்களில் டொலர் நெருக்கடியென்பது அவர்களுக்கு ஒருபொருட்டல்ல. டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்கென பெருமளவான கடன்களைப்பெற்று, அதனை மீளச்செலுத்துவதற்கு கால அவகாசம்கோரி நாட்டின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது.
உதயமாகும் புதுவருடத்தில் பால் பொங்குவதற்கு பாலோ அல்லது பாற்சோறு சமைப்பதற்கு அரிசியோ இல்லை. எமது நாடு இதற்கு முன்னரொருபோதும் இத்தகைய மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்ததில்லை.
நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளும் கட்டணங்களும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் அல்லது சேவை வழங்குனர்களாலேயே தீரமானிக்கப்படுகின்றன. ஆகவே தற்போது நாட்டில் நிறைவேற்றதிகாரமோ அல்லது அரசாங்கமோ இயங்குநிலையில் இல்லை.
எனவே அரசாங்கம் அனைத்து விதங்களிலும் தோல்வியடைந்திருக்கும் நிலையில், இனியேனும் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய அரசாங்கமொன்றை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு ராஜபக்ஷாக்கள் இடமளிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
