இனவாதமற்ற சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்! கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டு
இனவாதமற்ற, மத நல்லிணக்கத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், வறுமையில் வாழும் மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து, கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று(21.11.2026) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் போக்குகள்
அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இத்தகைய சூழலில், இன மற்றும் மத முரண்பாடுகளை மீண்டும் தூண்டி அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் இடம்பெறக்கூடாது.
அரசியல் அதிகாரத்தை இழந்த சில தரப்பினர், இனவாதத்தைத் தூண்டி சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்.

இவ்வாறான அரசியல் போக்குகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டதுடன், மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது.
வரவு-செலவுத் திட்டம்
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் புத்திஜீவிகள் முன்வைத்த கருத்துக்களும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமிடலில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் நீண்டகால வரலாற்றில், இனவாதமற்ற மற்றும் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது மிக முக்கியமான மாற்றமாகும்.

தேசிய மக்கள் சக்தி என்பது மக்களின் போராட்டங்கள், அர்ப்பணிப்பு, இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கமாகும்.
அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும், சமத்துவத்துடனும் வாழக்கூடிய இலங்கையை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்த இலக்குகளை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் கொள்கைகளையும் உள்ளடக்கியதாக தற்போதைய வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.