வர்த்தக நடவடிக்கைகளை வேறிடத்திற்கு எடுத்துச் செல்ல நேரிடும்: அரசாங்கத்தை எச்சரிக்கும் வணிக நிறுவனங்கள்
இலங்கையில் காணப்படும் மோசமான பொருளாதார நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், இலங்கையில் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என இலங்கையின் 10 முன்னணி வணிக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை ரீதியிலான அறிவித்தலை விடுத்துள்ளன.
நாட்டின் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் 10 வணிக நிறுவனங்கள் இணைந்து ஒரு மேடைக்குள் வந்துள்ளன.
ஏற்பட்டுள்ள நிலைமையை சீர்ப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியும் விடுத்துள்ளன.
பொருளாதார ரீதியான பாதகமான விளைவுகளைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்பார்க்கப்படும் சௌபாக்கியமான குறியீட்டை நோக்கி நகர்ந்து, இலங்கையை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வர உடனடி தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்வதாக வணிக நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வெளிநாட்டு பணத்தை குறிப்பாக டொலர்களை பெற்றுக்கொள்வதில் தனியார் துறையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.