உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா வசமானது - புடின் அறிவிப்பு
உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துள்ளதாக விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக ரஷ்யா அறிவிப்பு
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், மேற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்தன.
அந்த வகையில் குறித்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் அந்த பகுதிகளில் ரஷ்யா பொதுவாக்கெடுப்பு அண்மையில் நடத்தியது. இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக ரஷ்யா அறிவித்திருந்தது.
எனினும், இந்த தேர்தல் முடிவுகளை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைனின் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று வெளியிட்டார்.
மேற்கு உலக நாடுகள் மறுப்பு
தலைநபர் மொஸ்கோவின் கிரெம்லின் மாளிகையில் உள்ள புனித ஜோர்ஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்ய பகுதிகளாக புடின் பிரகடனப்படுத்தினார்.
எனினும், இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.
இதேவேளை, உக்ரைன் பிரதேசத்தை இணைத்ததைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் அறிவித்துள்ளன.